அதிக எச்சரிக்கை தேவையில்லை * கேப்டன் கோஹ்லி வருத்தம் | பெப்ரவரி 25, 2020

தினமலர்  தினமலர்
அதிக எச்சரிக்கை தேவையில்லை * கேப்டன் கோஹ்லி வருத்தம் | பெப்ரவரி 25, 2020

வெலிங்டன்: ‘‘அன்னிய மண்ணில் அதிக எச்சரிக்கை, கவனத்துடன் விளையாடுவதால் பலன் கிடைக்காது,’’ என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

இந்தியா, நியூசிலாந்து மோதிய முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. இதில் தோற்ற இந்தியா 0–1 என பின்தங்கியுள்ளது. இதில் இந்திய வீரர் புஜாரா இரு இன்னிங்சில் 11 (42 பந்து), 11 (81 பந்து) ரன் எடுத்தார். ஹனுமா விஹாரி 79 பந்தில் 15 ரன் எடுத்தார்.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியது:

பேட்டிங்கில் இந்திய வீரர்கள் ஒட்டுமொத்தமாக என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதிக எச்சரிக்கை அல்லது கவனத்துடன் விளையாடுவதால் பலன் கிடைக்காது. இந்த மனநிலையில் விளையாடினால், ‘ஷாட்டுகள்’ அடிப்பதையே நிறுத்தி விடுவோம்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு ரன் எடுப்பதற்கு கூட சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தால், பிறகு என்ன செய்யப் போகிறீர்கள். ஏதாவது ஒரு நல்ல பந்து உங்களை அவுட்டாகி விடும். சரி, சிறப்பாக வீசப்பட்ட பந்தில் தான் அவுட்டானீர்கள் என ஏற்றுக் கொள்ளலாம். என்றாலும் நான் இதுபோல யோசிப்பவன் அல்ல.

என்னைப் பொறுத்தவரையில் ஆடுகளத்தில் புற்கள் காணப்படுகின்றன என்பதை பார்த்தால், தாக்குதல் பாணியில் ரன்கள் சேர்க்க முயற்சிப்பேன். அப்போது தான் அணியை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

ஒருவேளை இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அடித்து விளையாட முயற்சித்தேன், ஆனால் பலன் கிடைக்கவில்லை, பரவாயில்லை உங்கள் முடிவு சரிதான் என்பதை ஏற்றுக் கொள்வதில் எவ்வித பிரச்னையும் இல்லை.

மற்றபடி அதிக எச்சரிக்கையுடன் விளையாடுவதால் எப்போதும் பலன் தராது. ஆடுகளங்கள் குறித்து அதிகமாக யோசித்தால், பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது. அன்னிய மண்ணில் இந்த எண்ணத்தை முற்றிலும் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை